ஈரோடு நந்தா சென்ட்ரல் பள்ளியில் 17வது ஆண்டு விழா
Posted on December 24, 2025 by Gopal
கல்வி
"சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய குழந்தை வளர்ப்பு" என்கிற தலைப்பில் கொண்டாடப்பட்ட இவ்விழாவினை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் அங்கத்தினர் பானுமதி சண்முகன் அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன் தலைமையேற்று உரையாற்றுகையில், கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவச் செல்வங்கள் நூறு சதவீத தேர்ச்சிப் பெற்றதில் மிகவும் பெருமையடைவதாகக் கூறினார். இதன் காரணமாக இந்திய கல்விக் கொள்கையின் கீழ் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட "சபல் தேர்வு" ன் மூலம் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதில் மகிழ்ச்சி கொள்வதாகத் தெரிவித்தார். இதற்கு ஆசிரியர்களின் அயராத உழைப்பு, மாணவர்களின் உற்சாகம் மற்றும் பெற்றோர்களின் நிலையான ஆதரவு என்று கூறுவதில் கடமைப்பட்டுள்ளேன் என்றார்.
மேலும், உலகம் மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பெற்றோர்கள் வேலை, பணம், தொழில், சமூக வளைதலங்கள் போன்றவற்றிக்கு மட்டுமே நேரத்தினை செலவிட்டு வருகிறார்கள். அதனை விடுத்து, பெற்றோர்கள் தன் குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல மனிதனாகவும், சமூகத்தினை நேசிக்கும் குடிமகனாகவும் வளர சிறிது நேரம் ஒதுக்குதல் மிகவும் அவசியம். அத்தகைய நேரத்தில் மற்றவர்களை மதிக்கும் பண்புகள், சமூகத்தில் நமக்கான பொறுப்பு மற்றும் நடந்துக் கொள்ளும் விதம் ஆகியவற்றை தனக்கான அனுபவங்களின் மூலம் பகிர்ந்துக் கொள்ளும் பட்சத்தில் சிறந்தொரு மனிதாக உருவெடுப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என்று கூறி மாணவ செல்வங்களுக்கும், அவர்தம் பெற்றோர்களுக்கும் நன்றி கூறி, தனது வாழ்த்தினைத் தெரிவித்தார்.
ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் எஸ். நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ். திருமூர்த்தி, நந்தா சென்ட்ரல் சிட்டி பள்ளியின் முதல்வர் ஏ.ஜி. பிரகாஷ் நாயர், நிர்வாக இயக்குனர் விதுஷா மூர்த்தி மற்றும் நிர்வாக அலுவலர் மனோகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி விழாவினை சிறப்பு செய்தார்கள்.
இதனை தொடர்ந்து நந்தா சென்ட்ரல் பள்ளியின் முதல்வர் சாரா இப்ராஹிம் கல்வியில் முன்னிலை பெற்ற மாணவர்கள்,தனித்திறன்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், விளையாட்டு போட்டிகளில் தேசிய அளவில் சாதனைப் புரிந்த மாணவர்களை வாழ்த்திப் பேசினார். மேலும், பள்ளியின் மாணவன்கள் அணித்தலைவன் எஸ். கபிலன், மாணவிகள் அணித்தலைவி எஸ்.ரிதன்யா, மொழித்துறையின் தலைவர் தனஸ்ரீ சக்தி, விளையாட்டுத்துறை தலைவி ஆர். ஹர்ஷினி மற்றும் கலைத்துறைத் தலைவி இ.எஸ். ஈஸ்பா ஆகியோர் நடப்பு கல்வியாண்டில் நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் சாதனைகள் அடங்கிய ஆண்டறிக்கையினை வாசித்தார்கள்.
முன்னதாக பள்ளியின் கலைத்துறைத் தலைவி இ.எஸ். ஈஸ்பா ஆண்டு விழாவில் கலந்துக் கொண்ட சிறப்பு விருந்தினர், மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர்களை வரவேற்றார்.
பின்னர், வெவ்வேறு துறைகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விஜய் தொலைகாட்சியின் புகழ்பெற்ற தொகுப்பாளர், நடிகர், எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் ஈரோடு மகேஷ் விருதுகளையம், சான்றிதழ்களையும் வழங்கி பேசுகையில், பெற்றோர்கள் தனது குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த மனிதாக உருவெடுக்க தினந்தோறும் அவர்களை கொண்டாடவேண்டும் என்றார். அதுபோல கைப்பேசியினை உபயோகிக்க வேண்டாம் என்று கூறுவதைவிட அதன் தொழில்நுட்பத்தினையும், அதனை கையாளும் முறைகளை தன் அனுவத்தின் மூலம் தன் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க முன் வரவேண்டும் என்று கூறினார்.
பெற்றோர்கள் மருத்துவராக, பொறியாளனாக, வழக்கறிஞராக வரவேண்டும் என்கிற தன் கனவினை குழந்தைகள் மீது புகுத்த இயலுவதை விடுத்து அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதில் முனைப்பு எடுப்பீர்களானால், அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும் என்று எடுத்துரைத்தார். மேலும், நாம் என்ன விதைக்கிறோமோ. அதுதான் முளைக்கும் என்பது போல, பெற்றோர்கள் அவர்களுக்கு முன்பாகவும், அவர்களிடமும் மிகவும் கனிவுடனும், தோழமையுடனும் நடந்து கொள்ள வலியுறுத்தி, பெற்றோர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் ஆடல், பாடல்கள் அடங்கிய பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் முடிவில், பள்ளியின் மாணவி ச. ரிதுமிகா கல்வி, விளையாட்டு போன்ற பல்வேறு திறனாய்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், கலை மாணவர்கள் மற்றும் அவர்தம் நிகழ்ச்சியில் சிறப்பாக அரங்கேற்றிய பெற்றோர்களுக்கும் நன்றி கூறினார்.