ஈரோடு பெருந்துறையில் பெண் செவிலியர் கொலை – சக ஊழியர் கைது!
Posted on October 19, 2026 by Gopal
மேலும்
நகைக்காகக் கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் – தாலிக்கொடி மீட்பு!
ஈரோடு மாவட்டம், பெருந்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விஜயமங்கலம் டோல்கேட் அருகே உள்ள பொன் கைலாஷ் நகர் பகுதியில், கடந்த 17.10.2026 அன்று அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் திருப்பூர் மாவட்டம், பல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த உத்ரா (26) என்பது தெரியவந்தது. இவர் காணாமல் போனது தொடர்பாக ஏற்கெனவே ஊத்துக்குளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, பெருந்துறை காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், உத்ரா பணிபுரிந்த மருத்துவமனையில் சக ஊழியராகப் பணியாற்றிய சரவணன் (23) என்பவர், நகைக்காக அவரைக் கொலை செய்து தாலிக்கொடியைத் திருடியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, சரவணனை 19.10.2026 அன்று போலீசார் கைது செய்து, திருடப்பட்ட தாலிக்கொடியையும் மீட்டனர். கைது செய்யப்பட்டவரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது.